Saturday

பிள்ளையாரும், பிள்ளை யானும்....!

நினைவு தெரிந்த காலங்களில், சுமாராக பரிட்சை எழுதி இருந்தால் கூடுதல் மார்க் போடுபவராகவும், எதுவுமே எழுதாவிட்டால் பாஸாக்கிவிடுகிற ஆபத்பாந்தவனாகவே அறிமுகமாகி இருந்தார். ஆனால் வளர வளர என்னளவில் அந்த நம்பிக்கையை சுக்குநூறாக்கிய பெருமை அவருக்கு உண்டு.

வயசுக்கு வந்த பின்னர், கோரிக்கைகள் மாறியிருந்தன. சில, பலரின் கடைக்கண் பார்வைகளுக்கு அவரிடம் மனுப் போட்டேன். காக்காய் உட்கார்ந்ததா அல்லது பனம் பழம் தானாய் விழுந்ததா என்பது தெரியாது.சில, பல நிகழ்வுகளும், சந்தோஷங்களும், அதன் தொடர்ச்சியான சோகங்களையும் நடந்தேறியது.இப்படியான அனுபவங்களினால் வெறுத்துப் போய் ஒரு கட்டத்தில் என்னை நாத்திகனாய் மாற்றியதில் ஆனைமுகத்தானுக்கு குறிப்பிடத் தக்க பங்கு இருந்தது.

எங்கள் கல்லூரியின் பின்னால் ”மயில்காடு” என்று ஒரு காடு இருந்தது. இப்போது அந்த காடு இல்லை,அழித்து விட்டார்கள். அந்த காட்டின் நடுவில் ஒரு பெரிய மேடையின் நடுவே ஒற்றை ஆளாய் ஒரு பிள்ளையார் இருந்தார். அவருக்கு பூசைகள் எல்லாம் கிடையாது, ஏனெனில் அந்த வனாந்திர பகுதியில் ஆட்கள் நடமாடாத காலம் அது...அந்த காடு தந்த தனிமையும், அமைதியும் எங்கள் குழுவிற்கு பிடித்திருந்ததால் கல்லூரி நாட்களில் ஆறாவது நண்பராகவே இருந்தார் பிள்ளையார்.கல்லூரி நாட்களுக்குப் பின்னால் தொழிலில் காலடி எடுத்து வைத்ததும் ஒரு பிள்ளையார் சதுர்த்தி அன்றுதான், அந்தக் கணக்கில் பார்த்தால் இன்றோடு பதினெட்டு வருட சர்வீஸ் ஆகிவிட்டது.

பிள்ளையார் குறித்து எனக்கு பல விமர்சனங்கள் உண்டு...ஆனாலும் பரஸ்பர சகிப்புத் தன்மையினால் இன்று வரை பிரியாமல் கூடவே இருக்கிறோம். கடவுள் என்பதற்கும் மேலே கூட்டாளி மாதிரியான ஒரு உறவு எங்களுக்குள்...இன்றைக்கு அவருக்கு பிறந்த நாள்!

ஹேப்பி பர்த்டே பாஸ்!

3 comments:

skarthee3 said...

பிள்ளையாரும், பிள்ளை யானும்....!
தலைப்பே கவிதை போல உள்ளது ...

தொழிலில் காலடி எடுத்து வைத்ததும் ஒரு பிள்ளையார் சதுர்த்தி அன்றுதான், அந்தக் கணக்கில் பார்த்தால் இன்றோடு பதினெட்டு வருட சர்வீஸ் ஆகிவிட்டது.
---வாழ்த்துக்கள் சார் !!
உங்கள் வாழ்வில் மென்மேலும் பல உச்சங்களை அடைய கடவுளிடம் ( உங்கள் கூட்டாளியிடம் ) வேண்டுகிறோம் !! [-O<

மங்கை said...

///ஆனால் வளர வளர என்னளவில் அந்த நம்பிக்கையை சுக்குநூறாக்கிய பெருமை அவருக்கு உண்டு.//

அப்படி இருந்தும் அந்த கூட்டாளிய வாழ்த்தறீங்க.. அதான் காணாமல் போகாம, நம்பிக்கை இழக்காம இருக்க வச்சிறுக்கார் தும்பிக்கைநாதன்...

செல்வா said...

//
கடவுள் என்பதற்கும் மேலே கூட்டாளி மாதிரியான ஒரு உறவு எங்களுக்குள்...இன்றைக்கு அவருக்கு பிறந்த நாள்!
///
ரொம்ப நல்லவர்ங்க நீங்க ..!! கடவுளை நம்ப மாட்டேன் அப்படின்னு சொல்லிட்டு அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லிருக்கீங்க .. நல்லா வருவீங்க ..!!

Post a Comment